ஒகனேக்கல், சின்னாறு பகுதியில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. அப்பகுதியில் போலீஸார் சிலர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சின்னாற்றின் கரையில், ஒருவர் மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்ததைப் பார்த்து திடுக்கிட்டு விரைந்து சென்று அவரைக் காப்பாற்றினர்.
பின்னர் அவரை ஒகனேக்கல் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸாருக்கு வியப்பளிக்கும் தகவலை வெளியிட்டார் அந்த நபர்.
தற்கொலைக்கு முயன்ற நபரின் பெயர் திருப்பதி. 35 வயதாகிறது. இவருக்கு சொந்த ஊர் பாப்பாரப்பட்டியை அடுத்துள்ள பட்டிமரத்தள்ளி கிராமம்.
பெங்களூரில் இரும்புக் கடை நடத்தி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக இவருக்கு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த லூர்து மேரி என்பவர் பழக்கமானார்.
தொலைபேசி மூலம் கிடைத்த இந்த நட்பு பின்னர் காதலாக மாறியது. இந்தக் காதலை தொடர்ந்து வந்த அதே வேளையில், செல்வி என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு மணந்துள்ளார் திருப்பதி. மேலும் தொலைபேசிக் காதலையும் தொடர்ந்துள்ளார்.
இப்படியே போனால் எப்படி என்று சமீபத்தில் லூர்து மேரியை திருப்பதி சந்தித்தார். அப்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தான் போன் மூலம் காதலித்து வந்த பெண் லூர்து மேரி இளம் பெண் அல்ல, மாறாக 60 வயதான பேரிளம்பெண் என்பதை அறிந்து திடுக்கிட்டார்.
இந்த ஏடா கூட காதலை அவரால் சகிக்க முடியவில்லை. மன உளைச்சலுக்குள்ளானார். இதனால்தான் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
திருப்பதியின் சோகக் கதையைக் கேட்டு நொந்து போன போலீஸார் அவரது குடும்பத்தினரை வரவழைத்து, திருப்பதிக்கு நிறைய புத்திமதிகளைச் சொல்லி ஊருக்கு அனுப்பி வைத்தனர
நன்றி:தட்ஸ்தமிழ்
